லடாக்கில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன. சோனம் வாங்சுக் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது. ஆனால் சமீபத்தில் வன்முறையாக மாறியதில் 5 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனால் லடாக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பேச்சுகள் இளைஞர்களை தூண்டி வன்முறைக்கு காரணமானதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சோனம் நடத்தி வந்த கல்வி அமைப்புக்கு வெளிநாட்டு நிதி பெறும் உரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், லடாக் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. இதில் லே உச்ச அமைப்பு, கார்கில் ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் லடாக் மக்களவை உறுப்பினர் முகமுது ஹனீஃபா ஜான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் தலா மூன்று பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
லடாக்கின் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை தொடர்பான கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த கூட்டம், லடாக்கின் எதிர்கால அரசியல் நிலையை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.