உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில், மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சங்கூர் பாபா என அழைக்கப்படும் ஜலாலுதீன் மற்றும் அவரது கூட்டாளி நஸ்ரின் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், ஜலாலுதீன் வெளிநாடுகளிலிருந்து பெருமளவு பணம் பெற்றுள்ளார். இதுவரை கண்டறியப்பட்ட 40 வங்கிக்கணக்குகளில் மட்டும் ரூ.106 கோடி பணம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பணம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் விதமாக மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது.
அத்துடன், பணமோசடி தடுப்பு சட்டம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டங்கள் மீறப்பட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சங்கூர் பாபா தொடர்பான வழக்கு மற்றும் அவரது சொத்துகள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகம், போலீஸ் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் இருந்து அமலாக்கத்துறை கேட்டு வருகின்றது.
அவரது சொத்துகள், வங்கிக் கணக்குகள், கைது செய்யப்பட்ட மற்ற நபர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. இவரது நடவடிக்கைகளால் சமூகத்தில் பிரச்சனைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தற்போதைக்கு மாநில மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.