புதுடில்லி: பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., – நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் நீண்டகாலமாக இருந்து வரும் சிக்கல்களை களைய, மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஒன்பது பேர் அடங்கிய நிபுணர் குழுவை கல்வி அமைச்சகம் நியமித்தது.

உயர்கல்வி செயலர் வினீத் ஜோஷி தலைமையில் செயல்படும் இந்த குழு, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி வாரிய உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளை சேகரித்து வருகிறது. குறிப்பாக, பிளஸ் 2 பாடத்திட்டமும் நுழைவுத் தேர்வுகளும் பொருந்தாமல் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளதால், அந்த முரண்பாடுகளை விரிவாக ஆய்வு செய்து வருகிறது.
சில தனியார் பயிற்சி மையங்கள், மாணவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலித்து, தரமான பயிற்சியை வழங்காமல் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதேசமயம், பிளஸ் 2 முடித்த மாணவர்களே அதிகளவில் இந்தத் தேர்வுகளை எதிர்கொள்வதால், அவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் பார்க்கப்பட வேண்டியது அவசியம் என கல்வி நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அரசு, இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை ஒருங்கிணைத்து உருவாகும் பரிந்துரைகள், எதிர்கால நுழைவுத் தேர்வு முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.