புதுடெல்லி: எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஏற்றுமதிக்கான தடை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மற்றும் கோழி தீவன உற்பத்தியில் எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் பால் விலை உயர்வுக்கு தீவன விலை உயர்வும் முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தீவன ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டால், உள்நாட்டு தீவன உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் மூலம் தீவன விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, 2023 ஜூலையில் எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு, அவ்வப்போது தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், எண்ணெய் நீக்கிய அரிசி தவிடு ஏற்றுமதிக்கான தடை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.