திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மூன்று வாரங்களாக நிலைத்திருக்கும் பிரிட்டிஷ் கடற்படை சொந்தமான எப்-35 பி வகை போர் விமானம், தற்போது அரசியல், பாதுகாப்பு மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம், போர்க்கப்பல் HMS Prince of Wales-இல் இருந்து ஜூன் 14-ஆம் தேதி புறப்பட்டபோது, அரபிக்கடலில் ரோந்து பணியில் இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட எரிபொருள் குறைவால் அவசர நிலை ஏற்பட்டு, இந்திய அரசு அனுமதியுடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கியதிலிருந்து இன்று வரை பழுது நீக்கப்படாத நிலையில் இருக்கிறது. ரூ.640 கோடி மதிப்புள்ள இந்த அதிநவீன போர் விமானத்தை சரிசெய்ய பிரிட்டிஷ் கடற்படையின் பொறியாளர்கள், மற்றும் விமானம் தயாரித்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தினர் தொடர்ந்து முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்கான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக பிரிட்டிஷ் பார்லிமென்டில் இது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. கன்சர்வேடிவ் எம்.பி. ஒபிஸ் ஜெக்டி, விமானம் மீண்டும் எப்போது புறப்படும், அதன் நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.
பிரிட்டன் அமைச்சர் லூக் பொல்லார்டு பதிலளிக்கையில், விமானம் தற்போது முழுமையாக பாதுகாப்பில் இருப்பதாகவும், இந்திய அதிகாரிகள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால், விமானத்தை பிரித்து எடுத்துச்செல்லவா, சரக்கு விமானத்தில் தூக்கிச் செல்வதா என்பது தொடர்பாக, பிரிட்டிஷ் ராணுவத்திற்குள் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அதேவேளை, விமான தரையிறங்கியபின் பைலட் ஒரு நாற்காலியை கோர்ந்து, விமானத்தின் அருகே உட்கார்ந்திருப்பதையும் கூட இணையவாசிகள் கலாய்த்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மீம்கள், கேலி மற்றும் கிண்டல்களாக பரவி வருகிறது. ‘கேரளா வந்து விட்டால் திரும்ப மனம் வராது’ என்ற வாசகத்துடன், கேரள சுற்றுலாத்துறை கூட இந்த விமானத்தை விளம்பரமாக பயன்படுத்தியுள்ளது. விமானத்தை மாட்டு வண்டியில் இழுத்து செல்வது, இரும்பு வியாபாரி பேரம் பேசுவது போன்ற காட்சிகளை நெட்டிசன்கள் உருவாக்கியுள்ள மீம்கள் வைரலாகி வருகின்றன. விமானத்தின் ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன சென்சார் வசதிகளும், இந்த நியாயப்படுத்த முடியாத நிலையை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.