சென்னை: காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. காதல் எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் காதலில் விழுவது நிச்சயம்.
நம் வாழ்வில் ஸ்பெஷலான ஒரு நபரை சந்திக்கும் போதோ அல்லது அவரை பற்றி சிந்திக்கும் போதோ உங்களுக்குள் ஒருவித வினோத உணர்வு ஏற்படும் அல்லவா? சரி, அது காதலா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்ள போகிறீர்கள்? ஏன் அவர்களை பற்றி சிந்திக்கும் போது ஒரு இன்பமயமான உணர்வு ஏற்படுகிறது? இது வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா? காலம் காலமாக நிலைத்து நிற்கும் காதல் என்ற இந்த அபூர்வ உணர்வை பற்றி கொஞ்சம் பார்போமா?
காதல் என்பது ஒரு ஆழமான பாச உணர்வாகும். அது நம்மை ஒருவரிடம் மிகவும் நெருக்கமாக இருக்க ஊக்குவிக்கும். இந்த நெருக்கத்தின் அளவு ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடும். யாருக்காக என்பதை பொறுத்து, காதலானது வலுவற்றதாக, உறுதியானதாக அல்லது கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும். காதல் மலரும் போது சில அறிகுறிகள் அதனை நமக்கு தெளிவுபடுத்தும். அவை படப்படப்பு, தொண்டை அடைத்தல், வியர்க்கும் உள்ளங்கை, மனம் கவர்ந்தவரை காணும் போதோ அல்லது நினைக்கும் போதோ அதிக அளவில் சந்தோஷம் பொங்குதல் போன்றவைகள் தான். இப்படித்தான் காதலுக்கும், நட்பிற்கும் உள்ள வேறுபாடுகள் கூறப்படுகிறது.
மனோதத்துவ நிபுணர்கள் பலரும் காதலை பற்றிய ஆய்வை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். காதல் என்பது சும்மா வாய்ப்பு கிடைப்பதால் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. யாருடன் இருக்கும் போது, மனமானது பூக்கிறதோ அவர்களின் மீது ஆழ் மனதில் உண்டாவது தான் காதல். முக பாவனை, குரல் அல்லது சைகை என எது வேண்டுமானாலும், காதல் உணர்வை தட்டி எழுப்பலாம். மேலும் காதல் வயப்பட்டிருக்கும் போது ஆழமான உணர்வுகளும், உளப்பிணியும் அதிகரிப்பதை நன்கு உணரலாம். குறிப்பாக மகிழ்ச்சியான மனதோடு மட்டுமே இவ்வுலகை பார்ப்போம்.
காதலை தேடும் போது, நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நபரை கண்களும் காதுகளும், தேடவும் கேட்கவும் செய்யும். அவர்கள் செய்யும் தவறை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல், நம் கனவுகளையும் ஆசைகளையும் அவர்களிடம் வெளிக்காட்ட முனைவோம். அதனால் தான் ‘காதலுக்கு கண்ணில்லை’ என்று கூறுகிறார்கள் போலும். சில சமயங்களில் காதல் குணத்தையும் கூட மாற்றி விடும். அதிலும் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை அதிக அளவில் இருக்கும். தன் மீது குறைவான சுய மதிப்பீடு கொண்ட பெண்கள், காதலில் விழுந்த பின்பு ஆசைகளையும் குணங்களையும் மாற்றிக் கொள்வார்கள் உன்று கூறப்படுகிறது.