திருமலை: ஆந்திர மாநில அரசு முதன்முறையாக விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணைக்கு பைலட் தண்ணீர் விமான சேவையை தொடங்க உள்ளது. இதனை முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோர் கூட்டாக இன்று தொடங்கி வைக்கின்றனர்.
இதையடுத்து, விஜயவாடா பிரகாசம் அணையில் இருந்து, இருவரும் நீர் விமானம் மூலம் ஸ்ரீசைலம் செல்வர். மீண்டும் அதே விமானத்தில் விஜயவாடா வர உள்ளனர். ஒரே விமானத்தில் நீரிலும், காற்றிலும் பறக்கும் புதிய அனுபவத்தை வழங்கி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த விமான சேவை சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று விஜயவாடா கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து அதிகாரிகள் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் பயணம் செய்யும் இந்த நீர் விமான சேவையில் 1000 பார்வையாளர்கள் ஸ்ரீசைலத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜயவாடா நகர போலீஸ் கமிஷனர் ராஜசேகர பாபு தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் விமானத்தின் சோதனை ஓட்டம் புறப்பட்டது. விமானம் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தை அடைந்தது. இதையடுத்து அதிகாரிகள் விஜயவாடா சென்று சோதனை நடத்தினர்.