புதுடில்லி: யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள், வயல்கள் பெருமளவில் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்ததால், மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் ரேகா குப்தா, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீடு வழங்கப்படும்” என உறுதியளித்தார்.

அவர் கூறியதாவது: “டில்லியின் 11 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, பாதிப்பு குறித்து கேட்டறிந்தேன். அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் அரசு இழப்பீடு வழங்கும். விரிவான அறிக்கைகள் கிடைத்தவுடன் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விரைவில் உதவி பெறுவார்கள்” என்றார்.
இதற்கிடையில், ஷாலிமார் பாக் அருகே கால்வாயில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஆறுதல் கூறினார். மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வடக்கு, மத்திய, கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, ஷாஹ்தாரா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் முழுமையான நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், மக்கள் நிம்மதி அடைய அரசு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் முதல்வர் கூறினார்.