பீஹார் மாநிலத்தில் நடந்த பரிதாபகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புர்னியா பகுதியில் ஐந்து இளைஞர்கள் துர்கா பூஜை விழாவில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வழியில் ரயில் தண்டவாளத்தில் நின்றபடி, ஓடும் ரயில்களை பின்னணியாகக் கொண்டு ரீல்ஸ் எடுக்க முயன்றனர்.

அவர்கள் கவனிக்காமல் இருந்தபோது ஜோக்பானியில் இருந்து தானாபூர் நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் அதிவேகமாக வந்தது. திடீரென மோதியதில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொரு இளைஞர் கடுமையாக காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் புகழ் பெறும் நோக்கில் உயிரையே பணயம் வைத்து செய்கிற செயல்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்த விபத்து மீண்டும் நிரூபித்துள்ளது. பாதுகாப்பு விதிகளை மீறி தண்டவாளத்தில் படம் எடுப்பது பல முறை தடைசெய்யப்பட்டாலும், இளைஞர்களின் அக்கறையின்மை உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.
ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் தண்டவாளங்களை பொழுதுபோக்கு இடமாகக் கருத வேண்டாம் என்றும், உயிரைக் காப்பதற்காக எப்போதும் பாதுகாப்பை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.