முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (1932-2024) இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர். சத்தமின்றி செயல்பட்ட அவரது தொலைநோக்கு கொள்கைகள் நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
வாழ்க்கை வரலாறு:
1932-ம் ஆண்டு பாகிஸ்தானின் காஹ் பகுதியில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
1966 முதல் 1969 வரை ஐ.நாவில் பணியாற்றிய மன்மோகன், பின்னர் டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் பேராசிரியராக பணியாற்றினார். அதன் பிறகு, நிதித் துறையின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், திட்டக்கமிஷன் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள்:
1991-ம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றிய போது, இந்தியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் இந்தியா புதிய பொருளாதார வளர்ச்சி பாதையை எட்டியது.
- வர்த்தக சீர்திருத்தங்கள்
- இறக்குமதி வரிகள் குறைத்தல்
- தொழில் துறையில் அரசு தலையீட்டை குறைத்தல்
- அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை உலக சந்தையில் இடம்பிடிக்கச் செய்தன.
பிரதமர் காலத்தின் சாதனைகள்:
2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்தினார்:
- ஆதார் திட்டம்: மத்திய மற்றும் மாநில திட்டங்களின் அடிப்படையாக உள்ள ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- 100 நாள் வேலை திட்டம்: 2005-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வந்தார்.
- ஆர்டிஐ சட்டம்: 2005-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஊழல்களை அம்பலப்படுத்த முக்கிய கருவியாக மாறியது.
- கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ): ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தார்.
- நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்: மக்களின் அடிப்படை தேவைகளை சமாளிக்க குறிக்கோளாக செயல்பட்டது.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்:
2006-ல் அமெரிக்காவுடன் மண்மோகன் சிங் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தம், இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்தியது. இந்நடவடிக்கைக்காக அவர் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டும், தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்.
தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி:
2004-2014 காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சி வீதம் சராசரியாக 6.7% இருந்தது. 2008-ம் ஆண்டில் உலக நிதி நெருக்கடியை குறைந்த பாதிப்புடன் சமாளிக்கவும்சாதித்தார்.
சத்தமில்லாமல் செயல்பட்டு மக்களுக்கு மகத்தான சேவைகளை வழங்கிய மன்மோகன் சிங், நவீன இந்தியாவின் முன்னேற்றத்தின் அடித்தளத்தை அமைத்தார். அவரது தொலைநோக்கு கொள்கைகள் இந்தியாவின் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும்.