நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இதன் போதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று முக்கிய மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். புதிய சட்டம் படி, 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டில் முதலமைச்சர் அல்லது அமைச்சர் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31வது நாளிலேயே ஆளுநர் அவர்களை பதவியிலிருந்து நீக்க முடியும்.

அதேபோல, பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்கள் கைதாகி சிறையில் இருந்தாலும், குடியரசுத் தலைவர் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில், தானாகவே அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும். இந்தச் சட்டம் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் வகையில் தனி மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்த மசோதா எதிர்மறையான வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய அனுமதி அளிக்குமாறு, மக்களவைச் செயலாளருக்கு அமித் ஷா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் முயற்சியாக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யப்படும் இந்த மசோதாக்கள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேசிய அரசியல் சூழலில் இம்மசோதா முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டால், தலைவர்கள் தங்கள் பதவியை இழக்கும் அபாயம் அதிகரிக்கிறது. சட்டத்தின் நடைமுறைகள் குறித்து விவாதங்கள் நாளையுடன் நிறைவடையும் கூட்டத்தில் தீவிரமாக நடைபெற உள்ளன.