புதுடில்லி: காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை தடை செய்யும் நடவடிக்கையை டில்லி அரசு மீண்டும் அமல்படுத்த இருக்கிறது. இந்த தடை நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும் என, காற்று தர மேலாண்மை கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்த தடை டில்லி மற்றும் சுற்றியுள்ள என்.சி.ஆர் பகுதிகளான குருகிராம், பரிதாபாத், நொய்டா, காஜியாபாத் மற்றும் சோனிபட்டிலும் நடைமுறைப்படும்.

முந்தைய உத்தரவுப்படி, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டது. இது டில்லி முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் நடைமுறையில் இருந்தது. 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் அதிகாரிகள் வாகனங்களை கண்காணிக்கக் கூடிய நிலை உருவாக்கப்பட்டது. இரண்டு நாட்களில், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கைக்கு எதிராக வாகன ஓட்டிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதன் காரணமாக, டில்லி அரசு கடந்த 3ம் தேதி தற்காலிகமாக அந்த நடவடிக்கையை நிறுத்தி வைத்ததாக அறிவித்தது. ஆனால் தற்போது, மீண்டும் அதையே தொடர வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக கமிஷன் கூறியுள்ளது.
மீண்டும் அமல்படுத்தப்படவுள்ள இந்த தடை, நகரத்தில் பரந்தளவில் நிலவும் காற்று மாசை குறைப்பதற்காக கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி மூலம் டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுவாசக்கூடிய சுத்தமான காற்றை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும்.