திருச்சி: பழுதடைந்துள்ள சேலம் உருக்காலையை புத்துயிர் அளிப்பது மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி ஆய்வு நடத்தினார்.
தனி விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய அமைச்சர் குமாரசாமி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் பூசாரிகள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் இரு மாநில விவசாயிகளும் பரஸ்பரம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “மழை பெய்தால் தமிழக, கர்நாடக விவசாயிகளுக்கு இடையே பிரச்னை இருக்காது.
மழை இல்லாத வறண்ட காலங்களில் காவிரி நீரின் சட்டப்பூர்வ விநியோகம் உதவாது. “காவிரி பிரச்னைக்கு கிவ் அண்ட் டேக் பாலிசி மட்டுமே தீர்வு.
காவிரி பிரச்னையில் அரசியல் தலையீடு கூடாது. இரு மாநிலங்களும் பேசி, நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். மேலும் பேசிய அவர், சேலம் உருக்காலையை புனரமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அங்கு மீண்டும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.