ராஜஸ்தானின் சித்தோர்கரில் துயரச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பனாஸ் ஆற்றில் ஒரு வேன் கவிழ்ந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குடும்பத்தினர் பில்வாராவில் உள்ள சவாய் போஜ் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கூகுள் மேப் காட்டிய வழியை பின்பற்றி சென்ற வேன், போக்குவரத்து தடை செய்யப்பட்ட பாதையில் பயணித்ததால் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு வயது சிறுமி உயிரிழந்தனர். மேலும் மாயமான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அதிகாலை 1 மணியளவில் நடந்துள்ளது. இரவு அல்லது அதிகாலை நேரங்களில் தூக்க கலக்கத்தால் வாகன ஓட்டுநர்கள் எளிதில் கவனச்சிதறல் அடையக்கூடும். அதனால் அத்தகைய நேரங்களில் பயணம் தவிர்க்கப்படுவது அவசியம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூகுள் மேப் வழிகாட்டுதல்களை முழுமையாக நம்புவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய விபத்துகளை தவிர்க்க, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது பகுத்தறிவும் எச்சரிக்கையும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.