புதுடில்லி: மாநில அரசுகள் இயற்றும் மசோதாக்கள் குறித்து ஆளுநர்களின் பங்கு, ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துவரும் வழக்கில், நேற்று நடந்த விசாரணையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், “மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் திட்டங்களை நிறைவேற்ற மசோதாக்களை காலதாமதம் செய்யாமல் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆளுநர்கள் அதைத் தடை செய்வது ஜனநாயகத்திற்கு விரோதம்” என வலியுறுத்தினார்.

இதற்கு மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பலர் கவர்னரை வெறும் தபால்காரராக நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. கவர்னரும் மாநில சட்டமன்றத்தின் ஒரு அங்கமே. அவரை தாண்டி யாரும் செல்ல முடியாது. மசோதாக்களை அவரின் பங்கு இல்லாமல் நடத்த முடியாது” என வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி கவாய், “நமது அரசியல் சாசனத்தின் கட்டமைப்பே ஜனநாயகத்தை நிலைநிறுத்துகிறது. அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் நம்மிடம் இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்” என்று கூறினார். மேலும், “கவர்னர் மாநில கூட்டாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் இணங்க இயங்க வேண்டும்” எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
மத்திய அரசு தொடர்ந்து, சில மாநிலங்களில் கவர்னர்களின் நடவடிக்கைகள் பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதாகக் கூறியபோதும், அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், தேவையானால் நீதிமன்ற வழியே தீர்வு பெறலாம் என்றும் வலியுறுத்தியது. அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்டு, வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.