உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டம் தாராலி பகுதியில் ஆகஸ்ட் 23ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதும் தாராலி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ச்சி நிலைக்குள் சென்றன. பல கட்டிடங்கள், குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. மண் சரிவால் வாகனங்கள் சேதமடைந்தன. மிகுந்த மழையும் மண் சரிவும் சாலைகளை பாதித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடங்க செய்துள்ளன.

தாராலி அருகே உள்ள மிங்கதேரா பகுதியிலும் குவால்டம் சாலை முற்றிலும் மூடப்பட்டது. சக்வாரா சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணிகள் சிரமத்துடன் நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. சாக்வாரா கிராமத்தில் ஒரு பெண் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேக வெடிப்பு மற்றும் மண் சரிவை அறிந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். அரசு, தடையை ஏற்படுத்தும் பகுதிகளை அடையாளம் கண்டறிந்து, நிவாரண முகாம்களை அமைத்து உள்ளது. தாராலி தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் சாமோலி, டேராடூன், ருத்ரபிரயாக் உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள், மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.