புதுடில்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி விதிமுறைகளில் பெரிய மாற்றம் நாளை (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் உரையாற்ற உள்ளார். இந்த உரையில், ஜிஎஸ்டி குறைப்பின் பயன்கள் மற்றும் அதன் தாக்கங்களை மக்களிடம் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி, இனி எளிமைப்படுத்தப்பட்டு இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, 5 மற்றும் 18 சதவீதம் மட்டுமே நடைமுறைக்கு வரும். ஆனால் புகையிலை உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கு வரி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தகர்களின் சுமை குறையும் என்றும், பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் செயல்பட உள்ளது. வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வியாபார உலகம் இதனை வரவேற்றாலும், மக்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஒருபுறம் விலைவாசி குறையும் என்ற நம்பிக்கை இருக்க, மறுபுறம் ஆடம்பரப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களிடம் சற்று அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான ஜிஎஸ்டி, இப்போது முக்கியமான கட்ட மாற்றத்தை சந்திக்கிறது. இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றும் போது, இதன் நீண்டகால பலன்களை வெளிப்படையாக கூறுவாரா என்பதில் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.