ராஜஸ்தான் மாநிலம் ஜெயசால்மரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று (டிச.,21) துவங்கியது. தற்பொழுது நாட்டின் பல்வேறு பொருட்களுக்கு 5%, 12%, 18%, 28% என்ற விகிதங்களில் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில், சில பொருட்களின் விகிதத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும், புகையிலை பொருட்கள், பான் மசாலா, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் உள்ளிட்ட 148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விகிதத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான வரியை மாற்றி அமைப்பது, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகைகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிப்பது போன்ற பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், விமான எரிபொருளுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது குறித்து ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.