79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தீபாவளிக்கு மக்களுக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றும், ஜிஎஸ்டியில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். இன்று நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு 96 வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். 22 குண்டுகள் முழங்கியதுடன், எம்.ஐ.17 விமானங்கள் மலர் தூவி வணக்கம் செலுத்தின. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை குறிக்கும் வகையில் போர் விமானங்கள் வானில் பறந்தன.

பிரதமர் தனது 12 ஆவது சுதந்திர தின உரையில், 140 கோடி மக்களின் கொண்டாட்டம் என்றும், கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம் வழிகாட்டி வந்ததாகவும் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதிகளுக்கு எட்டாத பதிலடி கொடுத்த வீரர்களுக்கு அவர் வணக்கம் செலுத்தினார். பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும் உறுதியளித்தார்.
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், போர் விமானங்களுக்கு தேவையான என்ஜின்களை இளம் விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். தீபாவளிக்கு முன்னர் ஜிஎஸ்டியில் முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் வணிக, உற்பத்தி துறைகள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மக்கள் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். சுதந்திர தின விழா உற்சாகமாக நிறைவு பெற்றது.