அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஹெச்1 பி விசா கட்டண உயர்வு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய விதிமுறைப்படி ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.

தற்போது விசா வைத்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த உயர்வு புதிய விண்ணப்பதாரர்களுக்கே பொருந்தும். இருந்தாலும், தகவல் குழப்பம் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு வழிகாட்டும் வகையில், வாஷிங்டன் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், அவசர நிலைமையில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் +1-202-550-9931 என்ற செல்போன் மற்றும் WhatsApp எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உடனடி உதவிக்காக மட்டுமே என்பதையும், வழக்கமான விசாரணைகளுக்காக இந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாமெனவும் தூதரகம் எச்சரித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா திரும்பும் இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மத்திய அரசு தூதரகங்களுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, ஹெச்1 பி விசா கட்டண உயர்வு குறித்து அலைமோதும் கேள்விகளுக்கு இடையே வெளிவந்ததால், இந்தியர்கள் பலருக்கு நிம்மதியளிக்கும் தீர்வாக பார்க்கப்படுகிறது.