சண்டிகர்: ஹரியானா அரசுப் பள்ளிகளில் 2016-ம் ஆண்டு போலியாக 4 லட்சம் மாணவர் சேர்க்கை மூலம் நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
நவம்பர் 2019 இல், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ உச்ச நீதிமன்றத்தை அணுகி, “விசாரணைக்கு பெரும் ஆட்கள் தேவைப்படுவதால், மாநில காவல் துறையிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும்” என்று கோரியது.
ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்ததால், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஹரியானா அரசுப் பள்ளிகளில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் 18 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிப்பதாகவும், மீதமுள்ள 4 லட்சம் பேர் போலிச் சேர்க்கை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக அவர்களின் நலத்திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த நிதியில் முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விஜிலென்ஸ் துறையின் பரிந்துரையின் பேரில் அரியானாவில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.