ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டை கடந்த 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருமணத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சிகளை லண்டனில் நடத்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த விழாக்கள் ஸ்டோக் பார்க்கில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லண்டன் ஹோட்டல் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டோக் பார்க் ஹோட்டல் நிர்வாகம் இந்த கோடையில் தங்கள் ஹோட்டலில் எந்த திருமண நிகழ்வுகளையும் நடத்த மாட்டோம் என்று அவர்களின் இன்ஸ்டாகிராமில் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது: “ஸ்டோக் பார்க்கில், நாங்கள் பொதுவாக தனிப்பட்ட விஷயங்களில் கருத்து தெரிவிப்பதில்லை, ஆனால் சமீபகால ஊடகங்களில் வெளியானது போல, நாங்கள் எந்த திருமண கொண்டாட்டங்களையும் திட்டமிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “எப்பொழுதும் போல், உலகத் தரம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் கோல்ஃப் மைதானமாக எங்கள் எதிர்கால பார்வைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் இதை வழங்க எங்கள் கூட்டாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம்.” மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சண்டும் 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனந்த் – ராதிகாவின் முதல் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாம்நகரில் நடைபெற்றது அதை தொடர்ந்து திருமணத்திற்கு முந்தைய விழா கடந்த மே மாதம் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடைபெற்றது.
இந்த ஆடம்பர நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஆனந்த்-ரத்திகாவின் திருமண கொண்டாட்டங்கள் கண்ணீரில் நடந்தது. ஹல்தி, மெஹந்தி, சங்கீத், திருமணம் மற்றும் வரவேற்பு என அம்பானி குடும்பத்தின் திருமண விழா பிரமாண்டமாக நடந்தது.
அம்பானி வீட்டு திருமணத்தில் ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ரஜினி, சூர்யா ஜோதிகா, நயன்தாரா விக்னேஷ் சிவன், அட்லீ பிரியா என தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன் போன்ற அமெரிக்க பிரபலங்களும் கலந்து கொண்டனர்.