கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, குழந்தைகள் எடை குறைவாக பிறப்பது கவலைக்குரிய அளவில் அதிகரித்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் நடந்த பிரசவங்களில், ஏழு குழந்தைகளில் ஒருவராவது 2.5 கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறந்துள்ளார். பொதுவாக, குழந்தைகள் 2.5 முதல் 3.5 கிலோ எடையில் பிறக்க வேண்டும் என்பதால், இந்த நிலை மருத்துவ ரீதியாக ஆபத்தானதாக கருதப்படுகிறது. மாநிலத்தில் சிசு மரண விகிதம் தற்போது ஒரு சதவீதமே இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை ஏற்படுத்துகிறது.
அறிக்கையில், எடை குறைவாகப் பிறப்பதற்கான முக்கிய காரணங்களில் கர்ப்பிணிகளின் ரத்தசோகை, உயர் இரத்த அழுத்தம், குறைமாத பிரசவம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மட்டும் 1.2 லட்சம் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை கண்டறியப்பட்டு, சுமார் 26,968 குறைமாத பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை தவிர, சுத்தமான குடிநீரின் பற்றாக்குறை, சுகாதாரமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், நோய்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவை குழந்தைகள் எடை குறைவாகப் பிறப்பதற்கான காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக பழங்குடியின மகளிரின் பிரசவங்களில் குழந்தைகள் எடை குறைவாகப் பிறப்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும், தற்போது நகர்ப்புற மற்றும் கிராமப்புறம் எங்கும் இது பரவலாகக் காணப்படுவது சுகாதாரத்துறைக்கு சவாலாக இருக்கிறது. குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கூடுதல் கவனிப்பு அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சுகாதார பிரச்னைகள் ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், கேரள சுகாதாரத் துறை கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து ஆலோசனைகள் வழங்கவும், உடல் பரிசோதனைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, அரசு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை வலுப்படுத்தும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், இயல்பு எடையுடனும் பிறக்க வேண்டும் என்பது சுகாதாரத் துறையின் முக்கிய இலக்காக உள்ளது.