மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் தரைமட்டமாகி, சாலைகள் சேதமடைந்து, தொலைதூர கிராமங்கள் பலவும் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப் பூர்துவார் மாவட்டங்களில் கனமழை கடுமையாக பெய்துள்ளது. அண்டை நாடான பூட்டானிலும் தொடர் மழை பெய்ததால் அணைகள் நிரம்பி, டீஸ்டா மற்றும் ஜல்தகா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கடுமையான வெள்ளத்தால் சிலிகுரி-டார்ஜிலிங் மாநில நெடுஞ்சாலையில் உள்ள இரும்பு பாலத்தின் தூண் சேதமடைந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். டார்ஜிலிங் மாவட்டத்தில் நிலச்சரிவால் கட்டடங்கள் இடிந்து, 12 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீட்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.