புதுடெல்லி: தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்கு நிலவி வந்த வெப்பம் தணிந்துள்ளது. இதனால் டெல்லி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சரிதா விஹார், முனிர்கா உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
காலை 9 மணி அறிக்கையின்படி இடியுடன் கூடிய மழை பெய்யும். மணிக்கு 20 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புதன்கிழமை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கை டெல்லியில் இன்று குறைந்தபட்சம் 29 முதல் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தொடரும் என்று கணித்திருந்தது. இந்நிலையில், டெல்லியில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்ற சாலைகளை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர்.
டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. டெல்லியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் ஏசி இயந்திரத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மின்கட்டணமும் அதிகரித்துள்ளது. மேலும், மக்கள் தண்ணீரின்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வார இறுதிக்குள் டெல்லியில் பருவமழையை எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஜூன் 29 அல்லது 30ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. அதே சமயம், கடந்த சில ஆண்டுகளாக அங்கு ஜூன் கடைசி வாரத்தில் பருவமழை துவங்கியது.