அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அகமதாபாத், காந்திநகர், சூரத் மற்றும் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலத்தில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சௌராஷ்டிரா, குஜராத்தின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 அன்று, காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, அகமதாபாத் நகரில் மட்டும் சுமார் 62 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், மாநிலத்தில் 43 இடங்களில் கடந்த 10 மணி நேரத்தில் 40 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. சூரத் மாவட்டத்தில் உள்ள பார்தோலி, சூரத் நகரம், கம்ரேஜ் மற்றும் மஹுவா தாலுகாக்கள் முறையே 135, 123, 120 மற்றும் 119 மிமீ மழை பதிவாகியுள்ளன. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலத்தில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் வல்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்கள் மற்றும் வடக்கு குஜராத்தில் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சராசரிக்கும் குறைவு: இது தவிர, நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் பதிவான மழை சராசரிக்கும் குறைவாகவே இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் தணிந்து தற்போது பரவலாக மழை பெய்து வருகின்ற போதிலும் இம்மாத நடுப்பகுதியில் மழையின் தாக்கம் குறையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய, வடமேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் சராசரி மழையளவை விட 14 சதவீதம், 33 சதவீதம் மற்றும் 13 சதவீதம் குறைவாகவும், நாட்டின் தெற்கு பகுதிகளில் சராசரி மழைப்பொழிவை விட அதிகமாகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம், மேகாலயா, அருணாச்சலம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ராஜஸ்தான் கிழக்கு, ஹரியானா, சத்தீஸ்கர், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மகாராஷ்டிரா, கோவா, தமிழ்நாடு, கடலோர கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் , தெலுங்கானா வானிலை ஆய்வு மையத்தின்படி, கடந்த சனிக்கிழமை இப்பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் 3ம் தேதி வரை கனமழை பெய்யும். மேலும், வரும் நாட்களில் கேரளா, தெற்கு கர்நாடகா, கோவா மற்றும் தமிழகத்திலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.