விஜயவாடா: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. கனமழை மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா, கோதாவரி மற்றும் அதன் கிளை ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.
மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
தெலங்கானாவின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் கம்மம் மாவட்டத்தில் உள்ள 110 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த தகவலை மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் மத்திய அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கு கொண்டு சென்றார்.
உயிரிழப்பைத் தடுக்க அனைத்து உதவிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு அமித் ஷா உத்தரவிட்டார். மெஹபூபாபாத் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேரை காணவில்லை.
இதனிடையே, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என ஐஎம்டி எச்சரித்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கட்டுப்பாட்டு அறைகளை திறந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தலைமை செயலாளர் சாந்திகுமாரி உத்தரவிட்டுள்ளார். ஹைதராபாத் மற்றும் விஜயவாடா பகுதிகளில் வெள்ளத்தை சமாளிக்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தங்கள் மாநில அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது, வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.