புதுடில்லி: யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட முகாலயப் பேரரசர் ஹூமாயூனின் கல்லறையின் குவிமாடம் இன்று சரிந்து விழுந்தது. சம்பவத்தின்போது அங்கு இருந்த 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் அவசரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக டில்லியில் பெய்து வரும் கனமழையால் பல சாலைகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் கட்டிடத்தின் கட்டுமானப் பகுதிகள் பலவீனமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஹூமாயூன் 1556 ஆம் ஆண்டு காலமான பின், அவரது மனைவி பேகா பேகம், 1558 இல் பாரசீக கட்டிடக் கலைஞர்களால் இந்த கல்லறையை கட்டித்தந்தார். இந்திய-பாரசீக கலையமைப்பின் சிறப்புமிகு உதாரணமாக விளங்கும் இந்த நினைவிடம், சுற்றுலா பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக இருந்தது.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழை தொடரும் நிலையில், சுற்றுப்பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.