பெங்களூரு: கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விற்கப்படும் அனைத்து வகையான பொருட்களின் பெயர்களும் கன்னடத்தில் இருக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கன்னட மொழி, நீர், நிலம் ஆகியவற்றில் எனது தலைமையிலான அரசு சமரசம் செய்து கொள்ளாது. நான் பதவியேற்றதில் இருந்து கன்னட மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
கன்னட மக்களுக்கும், கன்னட மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து பொருட்களின் பெயர்களும் கன்னடத்தில் இருக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களில் கன்னட மொழி எழுதப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.