புதுடெல்லி: தேசிய அங்கீகார வாரியம் (என்பிஏ) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ரேங்கிங் ஃப்ரேம்வொர்க் (என்ஐஆர்எஃப்) நடத்திய தரவரிசையில், நாட்டின் ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது. ஐஐடி சென்னையைத் தொடர்ந்து, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) – பெங்களூரு மற்றும் ஐஐடி மும்பை ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
ஆராய்ச்சிக்கான சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூரு பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
மேலாண்மை பிரிவில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) அகமதாபாத் முதலிடத்தையும், ஐஐஎம் பெங்களூரு இரண்டாவது இடத்தையும், ஐஐஎம் கோழிக்கோடு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. பொறியியல் பிரிவில் ஐஐடி சென்னை முதலிடத்திலும், ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி மும்பை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சிறந்த சட்ட நிறுவனம் பிரிவில் பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தையும், பல் மருத்துவப் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சவிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதலிடத்தையும் பிடித்தன. சிறந்த மாநில பொதுப் பல்கலைக்கழகமாக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஜாதவாபூர் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், புனேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) சிறந்த திறந்தநிலை பல்கலைக்கழகமாகவும், புனேவில் உள்ள சிம்பயோசிஸ் ஸ்கூல் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் சிறந்த திறன் பல்கலைக்கழகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.