பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் மல்டிபேக்கர் பங்குகளை கண்டுபிடிக்க சில முக்கிய அளவீடுகளைப் பார்க்க வேண்டும். முதலீட்டாளர்களின் முதலீட்டை பன்மடங்கு அதிகரிக்கும் தன்மை கொண்ட பங்குகளைத் தேர்வு செய்வது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய செயலாகும்.
முதலில், ஒரு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, அதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் 15% முதல் 20% வரையிலான அளவில் இருக்க வேண்டும். இது அதன் நிலைத்தன்மை மற்றும் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்யும்.
மேலும், நிறுவனத்தின் கடன் மற்றும் சொந்த மூலதன விகிதம் (D/E Ratio) குறைவாக இருக்க வேண்டும். குறைந்த கடன் விகிதம் கொண்ட நிறுவனங்கள் நிதி ரீதியாக வலுவாக இருக்கும். பொருளாதார மந்தநிலையின்போதும் குறைந்த அபாயம் மட்டுமே எதிர்கொள்ளும்.
அதேசமயம், நிறுவனத்தின் பணப்புழக்க நிலைமை மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சிக்கு எவ்வாறு முதலீடு செய்கிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும். நிறுவனம் தொடர்ந்து விரிவுபடுத்துவதற்காகவே பணத்தை மீண்டும் முதலீடு செய்யுமா அல்லது பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக வழங்குமா என்பதும் முக்கியமான விவரமாகும்.
ஒரு நிறுவனத்தின் பங்கு விலை தகுந்தமையா என்பது அதன் P/E விகிதம் மூலம் அறியலாம். தற்போதைய சந்தை விலையில் (CMP) அந்த பங்கு மலிவாக உள்ளதா அல்லது அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை இந்த அளவீடு தீர்மானிக்கும். மேலும் EBITDA, PEG Ratio போன்ற பொருளாதார அளவீடுகள் மூலம் அந்த பங்கு மல்டிபேக்கர் வகையை சேர்ந்ததா என்பதை பரிசோதிக்கலாம்.
மல்டிபேக்கர் பங்குகளை தேர்வு செய்யும் ஒரு முக்கிய வழிகாட்டி அளவீடு “26 சூத்திரம்” ஆகும். இந்தக் கொள்கையை இந்திய-அமெரிக்க முதலீட்டாளர் மோஹ்னிஷ் பப்ராய் உருவாக்கியுள்ளார். இது ஒரு நிறுவனத்தின் வருடாந்த வருமானம் 26% அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.
இந்த அளவீடுகளை பரிசோதித்து சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். மேலும், சந்தை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு, வல்லுநரின் ஆலோசனை பெற்று முதலீடு செய்வது நல்லது.