பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து இன்னும் உடன்பாடு எட்டப்படாதது இண்டி கூட்டணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஓட்டெண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும். இந்த சூழலில் முக்கிய கட்சிகளான ஜக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகியவை தங்களது வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால், காங்கிரஸ் தனித்து 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதனால் கூட்டணியின் நிலைமை மேலும் சிக்கலானது. பெரிய கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) இதுவரை காத்திருந்தாலும், இன்று திடீரென 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதன் மூலம் கூட்டணியின் ஒருமைப்பாட்டில் பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சந்திரசேகர் மாதேபூராவில், வீணா தேவி மோகமா தொகுதியில் நிற்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்ஜேடி 144 இடங்களில் போட்டியிட்டிருந்தது. இந்த முறை ஒரு இடம் குறைவாக 143 இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி இண்டி கூட்டணியில் இருந்து விலகி தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளது. தற்போது காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இடையே நிலவும் பங்கீடு பிரச்சினையால் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பே கூட்டணியின் எதிர்காலம் குறித்து பல்வேறு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.