கர்நாடக மாநிலம் கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் கடந்த ஆண்டு இதய நோயால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் ‘ஓ பாசிட்டிவ்’ என்ற ரத்த வகையை கொண்டவரென்று கூறினார்கள். ஆனால், மருத்துவ பரிசோதனையின் போது அவரது ரத்த வகை தெளிவாகக் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவசர நிலையை எதிர்கொண்ட டாக்டர்கள், மிகுந்த கவனத்துடன் அறுவை சிகிச்சையை முடித்தனர்.

அடுத்தகட்டமாக, அவரது ரத்த மாதிரி பெங்களூரு ஆய்வகத்திற்கும் பின்னர் பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள சர்வதேச ரத்தப்பிரிவு ஆய்வகமான ஐ.பி.ஜி.ஆர்.எல்-க்கும் அனுப்பப்பட்டது. அங்கு 10 மாதங்களாக நடைபெற்ற ஆராய்ச்சி முடிவில், இந்த ரத்த வகை உலகில் இதுவரை காணப்படாத புதிய வகையாக உறுதிப்படுத்தப்பட்டது. அவரது குடும்பத்தினரிலும் இந்த வகை ரத்தம் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
மூலக்கூறு மற்றும் மரபணு அடிப்படையிலான பரிசோதனையில், இந்த ரத்த வகை ஒரு புது பரிணாமம் என்று மருத்துவ அறிஞர்கள் உறுதிபடுத்தினர். அதன் அடிப்படையில், இந்த புதிய ரத்த வகைக்கு “சி.ஆர்.ஐ.பி.” (CRIP) எனும் பெயர் சூட்டப்பட்டது. இதில் ‘சி.ஆர்.’ என்பது குரோமர் (Chromer), ‘ஐ.பி.’ என்பது இந்தியா மற்றும் பெங்களூரு என்பதை குறிக்கிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், இத்தாலியின் மிலானில் நடைபெற்ற சர்வதேச ரத்த மாற்ற சங்கத்தின் 35வது மாநாட்டில், இந்த புதிய ரத்த வகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் புதிய தலைமுறையைக் குறிக்கும் பரிணாமமாகக் கருதப்படுகிறது.