மூணாறு: இடுக்கி மாவட்டம் ஓணப்பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா ஆர்வலர்களால் வருகை அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் 6 வரை ஆறு நாட்களில், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின்கீழ் செயல்படும் 12 முக்கிய சுற்றுலா பகுதிகளை மொத்தம் 48,416 பேர் வந்து ரசித்துச் சென்றனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.9,68,320 வருவாய் கிடைத்தது. வழக்கம்போல அதிகமானோர் வாகமணை நோக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகமணில் மட்டும் 13,928 பயணிகள் சென்றுள்ளார்கள். சாகச பூங்காவுக்கு 11,596 பேர் சென்றதால், இரண்டையும் சேர்த்து 25,524 பேர் சென்றனர். மேலும் பாஞ்சாலிமேடு 4322, மூணாறு தாவரவியல் பூங்கா 4314, ராமக்கல் மேடு 3444, ஸ்ரீ நாராயணபுரம் 2488, இடுக்கி ஹில் வியூ பூங்கா 2560, மாட்டுப்பட்டி அணையில் படகு சவாரிக்கு 1708 பேர் சென்றுள்ளனர். குறைவானோர் சென்ற இடங்களில் அருவிகுழி (652) மற்றும் ஆமைபாறை (833) இடம்பெற்றன.
இம்மாவட்டத்தில் மின்வாரியத்தினரின் பராமரிப்பில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணை, செப்டம்பர் 1 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் 4750 பேர் அணையை ரசித்துச் சென்றனர்.
இவ்வாறு, ஓணப்பண்டிகையை முன்னிட்டு இடுக்கி முழுவதும் சுற்றுலா வெள்ளம் பெருகி, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா துறைக்கும் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.