புதுடெல்லி: ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) இந்தியாவில் பல்வேறு வகையான வாகனங்களின் விற்பனை குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு:- 2024-ல் மொத்தம் 261,07,679 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2023-ல் 239,28,293 வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில், 2024-ல் கூடுதலாக 21,79,386 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 9.11 வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரிவு வாரியாக, இரு சக்கர வாகனங்கள் விற்பனை 10.78 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 10.49 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 5.18 சதவீதமும், டிராக்டர்கள் 2.55 சதவீதமும், வர்த்தக வாகனங்கள் 0.07 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 2024-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில், ஒட்டுமொத்த சில்லறை ஆட்டோமொபைல் விற்பனை 12.4 சதவீதம் குறைந்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள் (-17.6 சதவீதம்), மூன்று சக்கர வாகனங்கள் (-4.5 சதவீதம்), பயணிகள் வாகனங்கள் (-1.9 சதவீதம்) மற்றும் வர்த்தக வாகனங்கள் (-5.2 சதவீதம்) வளர்ச்சி கண்டு வருகின்றன. டிசம்பரில் டிராக்டர் விற்பனை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு 25.7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 48 சதவீத ஆட்டோமொபைல் டீலர்கள் ஜனவரி மாதத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். 10.69 சதவீதம் பேர் மந்தநிலையை எதிர்பார்க்கின்றனர்.
நீண்ட காலமாக, 2025-ம் ஆண்டு முழுவதையும் கருத்தில் கொண்டு, 66 சதவீத டீலர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். 26.72 சதவீதம் பேர் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கின்றனர். 6.87 சதவீதம் பேர் மட்டுமே சரிவை எதிர்பார்க்கின்றனர். ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.