பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முறை பயணம் பிரிட்டனில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் சந்தித்துப் பேசிய சந்திப்பின் முடிவில், இந்தியா – பிரிட்டன் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வு இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் நெருக்கத்துக்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்திய விளைபொருட்கள், நகைகள், பொறியியல் பொருட்கள் மற்றும் கடல்சார் உணவுகள் உள்ளிட்ட பல பொருட்கள் பிரிட்டன் சந்தைக்குள் வரி இல்லாமல் நுழைய முடியும். இதன் மூலம் விவசாயிகள், மீனவர்கள், சிறு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த நன்மை கிடைக்கும். அதே நேரத்தில், பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வரும் குளிர்பானங்கள், அழகு சாதனங்கள், வாகன பாகங்கள் போன்ற பொருட்களின் வரி குறைவடைந்து, விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக டீ.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவை பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலாளர்கள் பிரிட்டனில் அலுவலகம் இல்லாமலேயே 35 துறைகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றலாம். இது வேலைவாய்ப்பை பெருக்கும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 99 சதவீத பொருட்களுக்கு வரி இல்லாத ஒப்பந்தம் என்பது இந்திய வர்த்தகத்திற்கு பெரும் வெற்றி.
பிரதமர் மோடி பேசியபோது, இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் பன்னாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தும் என்று கூறினார். பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், “இது பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரிட்டன் கையெழுத்திட்ட மிக முக்கிய வர்த்தக ஒப்பந்தம்” என தெரிவித்தார். ஆங்கில மொழி மொழிபெயர்ப்பு கலவரத்தில் பிரதமர் மோடி காட்டிய நெகிழ்வும் அங்கிருந்தோர் மனதை தொட்டது.