புது டெல்லி: “உலகளவில் வருமான சமத்துவத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது” என்று உலக வங்கி அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ‘வறுமை மற்றும் சமத்துவம்’ குறித்த கினி குறியீட்டு அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. கினி குறியீடு என்பது ஒரு நாட்டின் மக்கள்தொகைக்குள் வருமானம் மற்றும் செல்வ சமத்துவமின்மையை அளவிடும் ஒரு அளவீடு ஆகும். கினி குறியீடு 0 (சரியான சமத்துவம்) முதல் 100 (சரியான சமத்துவமின்மை) வரை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற நாடுகள் அதிக சமமான விநியோகம் இருப்பதைக் குறிக்கின்றன. இந்தியாவைப் பற்றி அறிக்கை கூறியிருப்பதாவது:- இந்தியா 25.5 என்ற கினி குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளது, இது வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகில் 4-வது மிகவும் சமமான நாடாகும். ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா மற்றும் பெலாரஸுக்குப் பிறகு இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. கினி குறியீட்டின்படி இந்தியா 25.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 2011-ம் ஆண்டில், கினி குறியீட்டில் இந்தியா 28.8 புள்ளிகளைப் பெற்றிருந்தது.

தற்போது, ஸ்லோவாக் குடியரசு (24.1), ஸ்லோவேனியா (24.3) மற்றும் பெலாரஸ் (24.4) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. சீனா (35.7) மற்றும் அமெரிக்கா (41.8), அனைத்து G7 நாடுகள் மற்றும் G20 நாடுகள் உட்பட முக்கிய உலகப் பொருளாதாரங்களை விட இந்தியாவின் 25.5 புள்ளிகள் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளது. உலகின் முக்கிய பொருளாதாரங்களுடன் இணையாக இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. 2011 மற்றும் 2023-க்கு இடையில், இந்தியாவில் 171 மில்லியன் மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். மேலும், 2011 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 16.2 சதவீதத்திலிருந்து 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வறுமையை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதே இதற்குக் காரணம். மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (55 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகள்), ஆதார் அட்டை வழங்கல் (142 கோடி மக்களுக்கு), அரசு நலத்திட்ட மானியத்தை வங்கிகளுக்கு நேரடியாக மாற்றுதல் (மார்ச் 2023 வரை ரூ. 3.48 லட்சம் கோடி சேமிப்பு) ஆகியவை மக்களை நேரடியாகச் சென்றடைய உதவியுள்ளன. மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 41 கோடி சுகாதார அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’, பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா மற்றும் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு விநியோகம் (பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா) போன்ற திட்டங்களும் முக்கிய பங்கு வகித்துள்ளன. உலகின் வளர்ந்த நாடுகளுக்குக் கூட வருமான சமத்துவமின்மை ஒரு சவாலாக இருப்பதால், தொழில்நுட்பம் சார்ந்த பொது நிர்வாகம் எவ்வாறு சமத்துவமின்மையைக் குறைக்க முடியும் என்பதற்கு இந்தியாவின் முயற்சிகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று மத்திய சமூக நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.