புதுடில்லி: உரி, புல்வாமா, இப்போது பஹல்காம் என பாகிஸ்தானின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, இந்தியா மீண்டும் கடும் பாடம் புகட்டி இருக்கிறது. இந்த முறை “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட அதிரடி ராணுவ நடவடிக்கையின் மூலம், இந்திய ராணுவம் தனது அதிநவீன உளவுத் திறனையும், துல்லியத் தாக்குதல்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி, 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு பதிலடியாக, மே 7ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
இது போன்ற தாக்குதல்களின் பின்னணியில், இந்தியா ஒவ்வொரு முறையும் பயங்கரவாதிகளை ஒழிக்க திடமாக நின்றுள்ளது. 2016-ம் ஆண்டு உரி தாக்குதல், அதன் பின் புல்வாமா தாக்குதல் என, இந்தியா குறுகிய காலத்திலேயே வன்முறை சார்ந்த பதிலடிகளை அளித்து வந்துள்ளது.
உரி தாக்குதலுக்குப் பின் 10 நாட்களிலேயே, புல்வாமா தாக்குதலுக்குப் பின் 11 நாட்களிலேயே இந்தியா நடவடிக்கை எடுத்தது. தற்போது பஹல்காம் தாக்குதலுக்குப் பின் 15 நாட்களில், இந்திய ராணுவம் போர்க்கால ஒத்திகை போன்ற துல்லியத் திட்டமிடலுடன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த முறை இந்தியா எடுத்த நடவடிக்கையில் புதிய கோணமாக, பாகிஸ்தானை தவறான நம்பிக்கைக்கு தள்ளிய வண்ணம், முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் திசைதிருப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மட்டுமல்லாமல், அதற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கும் நாடுகளுக்கும் இந்தத் தாக்குதல் ஒரு முக்கியமான செய்தியாக அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைபாடு தெளிவாக தெரிகிறது. பல பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பிரதமரின் இந்த தீர்மானமான நடவடிக்கையை பாராட்டியுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் பயங்கரவாத குரல்வளையை தற்காலிகமாக ஒடுக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் இதே நேரத்தில், பயங்கரவாதத்தின் ஆணிவேரை முற்றிலுமாக அழிக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு தரப்புகளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.