
புதுடில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்டு மார்கோஸ் சந்தித்தார். இருவரும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய உரையாடல் நடத்தினர். இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தங்களில் விமானப்படை மற்றும் கடற்படை ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்ற திட்டம், கிரிமினல் விசாரணைகளில் சட்ட உதவி உள்ளிட்டவை அடங்கும். இரண்டு நாடுகளும் இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் வரை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மீதான நம்பிக்கையை வலியுறுத்தின.

பிலிப்பைன்ஸ் அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு, இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே நிலவும் 75 ஆண்டு தூதரக உறவை நினைவுகூறும் வகையிலும் அமைந்தது. இதற்காக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
பிரதமர் மோடி கூறுகையில், இருநாடுகளும் நண்பர்கள் மட்டுமல்ல, கூட்டாளிகளும் என்றும், இந்த நட்பு எதிர்கால வளர்ச்சிக்கான உறுதிமொழி என்றும் தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் வர்த்தக சுதந்திரம் முக்கியம் என்பதை இரண்டு நாடுகளும் வலியுறுத்தின. பஹல்காம் தாக்குதலை கண்டித்த பிலிப்பைன்ஸ் அரசுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்புகள் எதிர்கால இருநாட்டு திட்டங்களுக்கு ஒரு வலுவான அடித்தளமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.