புது டெல்லி: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதித் துறையை கடுமையாக பாதிக்கும்.
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 50 நாடுகளை குறிவைப்பது உட்பட, இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “இந்த 50 நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மை உள்ளிட்ட நான்கு விஷயங்களில் வர்த்தக அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. வர்த்தக அமைச்சகம் ஏற்கனவே 20 நாடுகளில் கவனம் செலுத்தி வந்தது. இப்போது இதில் மேலும் 30 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன,” என்று அந்த அதிகாரி கூறினார். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி $35.14 பில்லியனாக இருந்தது.
அதே நேரத்தில், வர்த்தகப் பற்றாக்குறை நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 18.78 பில்லியன் டாலராகக் குறைந்தது. 2025-26 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில், ஏற்றுமதி 1.92 சதவீதம் அதிகரித்து 112.17 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 4.24 சதவீதம் அதிகரித்து 179.44 பில்லியன் டாலராகவும் இருந்தது.