சென்னை: வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசுமுறை பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா-இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இதன் அடிப்படையில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து செயற்படுவதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்கும். இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட முதலாவது இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவென தெரிவிக்கப்படுகிறது. ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை, நமது தொப்புள் கொடி உறவினர்களான இலங்கைத் தமிழர்களை கொன்றது இலங்கை ராணுவம்தான். சிங்கள இராணுவம் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது. பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை தியாகம் செய்து தமது மண்ணை விடுவிக்கவும், தாயகத்தை மீட்பதற்காகவும் போராடிய விடுதலை இயக்கத்தை சிங்கள இராணுவம் ஒடுக்கியது.

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி, போர்க்களத்தில் போராடிய எட்டு தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி, கைகளைக் கட்டி, தலையில் சுட்டுக் கொன்று, விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா மீதான பாலியல் துஷ்பிரயோகம், சிதைத்தல், சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகளை உலக மனசாட்சியை உலுக்கியது. இந்த கொடூர காட்சிகளை பார்த்த அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதறி அழுதனர்.
இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவத்தை ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் குற்றப்பிரிவில் அடைத்து விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியம் போராடுகிறது. இந்நிலையில், இலங்கை ராணுவத்துடன் பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ள ராணுவ ஒப்பந்தம் வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். தமிழ் சமூகத்திற்கு துரோகம் இழைத்த பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான ‘இலங்கை மித்ர விபூஷண’ வழங்கப்படுவதை தமிழ் மக்களும் பொருத்தமாக கருதுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.