
புதுடில்லி: வக்ப் திருத்தச்சட்டம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பார்லிமென்டின் இரு சபைகளிலும் கடும் விவாதங்களுக்கு இடையில் வக்ப் திருத்த மசோதா நிறைவேறியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த மசோதா சட்டமாகவும் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து, பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஷபாகத் அலி கான் கருத்து வெளியிட்டிருந்தார். அதில், “இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் மசூதிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்; அதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,” என்றார்.

இந்தக் கருத்துக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் கருத்தை முற்றிலும் நிராகரிப்பதாகத் தெரிவித்தார். அவர் கூறியதாவது: “வக்ப் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானுக்கு கருத்து தெரிவிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. மேலும், சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேசுவதற்கு முன்னால், தங்கள் நாட்டில் நடைபெறும் மோசமான நிகழ்வுகளைத் தடுக்கவே அவர்கள் முன்வர வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.