புதுடில்லி: இந்தியாவில் வலி நிவாரண மாத்திரைகள், தைலங்கள் உள்ளிட்ட மருந்துகளின் சந்தை மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அந்த மதிப்பு சுமார் ரூ.16,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. நீல்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் இந்த வேகமான வளர்ச்சியை உறுதி செய்கின்றன. மக்கள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தாங்கள் விரும்பும் மருந்துகளை வாங்கி பயன்படத்தும் நிலை பெருகியிருப்பதை இது காட்டுகிறது.

‘ஓவர் தி கவுன்டர்’ எனப்படும் பொதுமருந்துகளில், வலி நிவாரணிகள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கொரோனா பரவலுக்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் ஐந்து புதிய வலி நிவாரண பிராண்டுகள் அறிமுகமாகி வருகின்றன. 2020ஆம் ஆண்டில் வோலினி, ஆம்னிஜெல், டோலோ, சாரிடான் போன்ற 1,552 பிராண்டுகள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2,771 ஆக உயர்ந்துள்ளது. இது போலி தேவையை உருவாக்கும் விளம்பரங்கள் மூலம் சந்தையை கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாட்டை வெளிக்கொணர்கிறது.
நகரமயமாக்கல், வேலைக்குழப்பம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு காயங்கள் ஆகியவை வலி நிவாரணிகளை விரைந்து தேடும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளன. நுகர்வோர் விரைவில் நிவாரணம் தரும் பிராண்டுகளை தேர்வுசெய்வதாலேயே இந்த சந்தை வளர்ச்சியடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது, மக்கள் மத்தியில் மருத்துவ அறிவின்மை மற்றும் சுயமருந்து கலாச்சாரத்தின் ஆழமான விளைவாகவும் பார்க்கப்படுகிறது.
மருத்துவ நிபுணர்கள் இதை கடுமையாக எச்சரிக்கின்றனர். மருந்துகளின் தவறான மற்றும் அதிகப்படியான பயன்பாடு சிறுநீரகம், குடல், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. உடனடி நிவாரணம் வேண்டுமெனும் கோரிக்கையில் முந்தும் நுகர்வோர்கள், நீண்ட கால நன்மையை இழப்பதாகவும், மருந்துகளின் பக்கவிளைவுகளை உணராதவாறே நம்பிக்கையுடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.