மும்பை: “இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் 2028க்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும்,” என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்தார். அவர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார். தனது அரசுமுறை பயணத்தை மும்பையில் இருந்து துவங்கி, முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய 125 பேர் கொண்ட குழுவுடன் இந்தியாவை வந்தடைந்தார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “கடந்த ஜூலை மாதம் இந்தியா – பிரிட்டன் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம், சாதாரண ஆவணம் அல்ல. அது வளர்ச்சியின் புதிய துவக்கப்புள்ளி. இந்தியாவுடன் நெருங்கிய பொருளாதார உறவு பிரிட்டனுக்கும் நன்மை தரும். இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சந்தை அணுகல் விரிவடையும்,” எனக் கூறினார்.
அத்துடன், “இந்த ஒப்பந்தம் 2030க்குள் இரு நாடுகளின் வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் குறையவுள்ளன. இதனால், வணிகம் எளிதாகும். இந்தியா வேகமாக வளர்கிறது. அதன் பொருளாதாரம் 2028க்குள் உலகின் மூன்றாவது பெரியதாக மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள், அழகு சாதனப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும். மேலும், பிரிட்டனின் விஸ்கி மது வகைகளுக்கான வரி 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளும் பொருளாதார ரீதியாக நெருக்கமாக இணைவது உறுதி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.