
பாகிஸ்தானுடன் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படை அரபிக்கடலில் பல போர்க்கப்பல்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடற்படையும் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைக் தொடர்ந்து, இந்திய ராணுவம் வான்வழி பாதுகாப்பு மூலம் அதனை இடைமறித்து அழித்துள்ளது. அதே நேரத்தில், ஜெய்சால்மர் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் இந்திய பாதுகாப்புப் படைகளால் தடுக்கப்பட்டன.

இதனால் எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.இந்த சூழலில், இந்திய கடற்படை பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சிக்கு அருகே தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் பயன்படுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கான ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
அரபிக்கடலில் இந்திய கடற்படையின் பல போர்க்கப்பல்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் முக்கிய இலக்குகளை கண்காணிக்க இந்த கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் பலதரப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளை வெளிப்படுத்துகின்றன.இந்நிலையில், கடற்படையின் நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், எல்லை பகுதியிலும் இந்திய ராணுவம் முழு செயல்பாட்டுடன் தயாராக உள்ளது. இந்த நிலைமையில் பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.