புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தபோது, சலுகை விலையில் எண்ணெய் வழங்கிய ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வந்தது.

2022 முதல் இந்த கொள்முதல் கணிசமாக உயர்ந்தது. ஆனால் உக்ரைன் போரின் பின்னணியில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்ததால், இரு நாடுகளிடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது.
இதன் நடுவே, எண்ணெய் கொள்முதல் நிறுத்தியதாக வந்த தகவலுக்கு, நிறுவனத் தலைவர் ஏ.எஸ். சாஹ்னி “ரஷ்ய கச்சா எண்ணெய் மீது எந்த தடையும் இல்லை. கொள்முதல் எதுவும் நிறுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
கொள்முதல் அளவை குறைக்கவோ அதிகரிக்கவோ அரசின் ஆணை எதுவும் வரவில்லை என்றும், சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்தே கொள்முதல் நடைபெறும் என்றும் கூறினார். பாரத் பெட்ரோலியத்தின் அறிக்கையில், ரஷ்ய எண்ணெய் மொத்த கொள்முதலில் 34% பங்குவகிப்பதாகவும், தடைகள் இல்லாத வரை இதை 30-35% அளவில் வைத்திருக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.