புதுடெல்லி: குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்களின் உடல்கள் ஜனவரி 2022-ல் கனடா எல்லைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, குஜராத் அகமதாபாத் போலீசார் நடத்திய விசாரணையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்வி நிறுவன முதல்வர் பவேஷ் அசோக்பாய் படேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற விரும்பும் இந்தியர்களிடம் இருந்து பவேஷ் ரூ.60 லட்சம் வரை பெற்றதாகவும், கனேடிய கல்லூரியில் சேருவதற்கு மாணவர் விசா வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அமலாக்க இயக்குனரகமும் விசாரணை நடத்தியதில், மும்பை மற்றும் நாக்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், அமெரிக்க எல்லையைத் தாண்டி இந்தியர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு கனேடிய கல்லூரிகளில் சேர்க்கைக்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வாரம் மும்பை, நாக்பூர், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு 35,000 இந்தியர்களை கனேடிய கல்லூரிகளுக்கு அனுப்புவது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்க இயக்குனரகம் பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ. 19 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.