
துபாயில் இருந்து வெளியான தகவலின்படி, ஐக்கிய அரபு எமிரேட்சு (யு.ஏ.இ.) தற்போது இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய வகை கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன், 4.66 கோடி ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கும், திறமையான நிபுணர்களுக்கும் மட்டுமே இந்த விசா வழங்கப்பட்டு வந்தது. தற்போது ‘நியமன கோல்டன் விசா’ என்ற வகையில் 23.30 லட்சம் ரூபாய் கட்டணத்தில் புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யு.ஏ.இ.யின் கோல்டன் விசா திட்டம் மூலம் ஒரு நபர் பணி சான்றுகள் மற்றும் ஆதார ஆவணங்கள் இல்லாமலே 10 ஆண்டுகள் வரை தங்க அனுமதியுடன் வாழலாம். இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் மனைவி, கணவர் மற்றும் பிள்ளைகளுக்கும் நேரடி அனுமதி கிடைக்கும். மேலும், இவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 133 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கவும் இந்த விசா உதவுகிறது.
சினிமா, கலை, மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சாதனையாளர்களுக்கும் இந்த விசா வழங்கப்படுகிறது. புதிய நியமன கோல்டன் விசா திட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டின் அரசிடம் முதலில் ஒப்புதல் பெற்று, பின்னர் யு.ஏ.இ. அங்கீகரித்த ஆலோசனையாளர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அரசு அனைத்து விவரங்களையும் பரிசீலித்த பின்னரே கோல்டன் விசா வழங்கப்படும்.
இந்த புதிய திட்டம் மூலம், இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தவர்களுக்கு யு.ஏ.இ.-வில் வாழவும் தொழில் செய்யவும் புதிய வாயில்கள் திறக்கப்படுகின்றன. மேலும், யு.ஏ.இ.யின் முதலீட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கும் இது துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.