புதுடில்லி: கடந்த நிதியாண்டில் இந்தியா, ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் வைரங்களை விடவும் அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது அரசு தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வழக்கமாக அதிகம் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் பெட்ரோலியப் பொருட்களும், வைரங்களும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஆனால் கடந்த நிதியாண்டில், இந்த இரண்டு பிரிவுகளையும் மிஞ்சும் வகையில் ஸ்மார்ட்போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 55 சதவீதம் அதிகரித்து, 2.05 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இந்த வளர்ச்சி, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி திறனை காட்டிக்கொடுக்கும் முக்கியமான விசயமாக இருக்கிறது. அமெரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, ஜப்பான் மற்றும் செக் குடியரசு ஆகியவை கடந்த நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த முக்கிய நாடுகளாக உள்ளன.
முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அமெரிக்காவுக்கு 5 மடங்கும், ஜப்பானுக்கு 4 மடங்கும் அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகமான முன்னேற்றம், உலக சந்தையில் இந்தியாவின் தொழில்நுட்பத்திறனை வலியுறுத்துகின்றது.
இந்த வளர்ச்சிக்கு முதன்மையான பங்காற்றியது, மத்திய அரசின் உற்பத்தி சார் ஊக்குவிப்பு (PLI) திட்டம் ஆகும். இந்தத் திட்டம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, பல உலகளாவிய முதலீடுகளை இந்தியாவிற்குள் ஈர்த்துள்ளது. இதில் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் உற்பத்தி மையங்களை நிறுவியுள்ளன.
அதன் விளைவாக, உற்பத்தித் திறன் உயர்ந்ததுடன், உலக சந்தைக்கு இந்தியா ஒரு முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பையும், அரசுக்கு வருமானத்தையும் அதிகரிக்க வாய்ப்பு தருகிறது.
அதே நேரத்தில், இந்த வெற்றியை நிலைநிறுத்தும் வகையில் அரசும், தொழில்துறையும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். உள்நாட்டு உற்பத்தி வலுப்பெறும் போது, இந்தியாவின் உலகப் பொருளாதாரத்தில் பிடியும் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை.