புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதன் எதிரொலியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ரஷ்யா தனது கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்காவிட்டால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 200 டாலரை தாண்டும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று தெரிவித்தார்.
இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்தியாவின் முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, யார் மலிவான கச்சா எண்ணெயை வழங்குகிறார்களோ அவர்களிடமிருந்து இறக்குமதி செய்வோம். எமது மக்களின் சுமையை குறைப்பதே எமது நோக்கமாகும். எங்களின் முடிவால் உலக நாடுகள் பலனடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.